தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார்| Dinamalar

ஹைதராபாத், தெலுங்கு திரை உலகின், ‘சூப்பர் ஸ்டார்’ என வர்ணிக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணா, 80, ஹைதராபாத் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார்.

‘டோலிவுட்’ என்றுஅழைக்கப்படும் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகனாக மக்கள் மனம் கவர்ந்த நடிகர் கிருஷ்ணா, 1961ல் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர், 1965ல் கதாநாயகன் ஆனார். 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், தெலுங்கு திரையுலகின், ‘சூப்பர் ஸ்டார்’ என வர்ணிக்கப்பட்டார். பல புதிய தொழில்நுட்பங்களை தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்.

தெலுங்கு சினிமாவின் முதல் ‘சினிமாஸ்கோப், முதல் ஈஸ்ட்மேன்கலர், முதல், 70 எம்.எம்., முதல், டி.டி.எஸ்., தொழில்நுட்பங்களை தன் படங்களில் அறிமுகப்படுத்தினார்.

கடந்த 2009ல், நடிகர் விக்ரம் நடித்த கந்தசாமி தமிழ் திரைப்படத்தில், இவர் சி.பி.ஐ., அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றினார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் எலுரு லோக்சபா தொகுதி தேர்தலில் 1989ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் பிரதமர் ராஜிவ் மறைவுக்குப் பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இவரது மகன் மகேஷ் பாபு, தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ளார். இவரது மருமகன் ஜெயதேவ் கல்லா, தெலுங்கு தேசம் கட்சியின் குண்டூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.தெலுங்கானாவின் ஹைதராபாதில் வசித்து வந்த கிருஷ்ணாவுக்கு நேற்றுமுன் தினம் அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, ‘வென்டிலேட்டர்’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவி வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணா, நேற்று அதிகாலை 4:09 மணிக்கு காலமானார்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ”தன்னுடைய திறமையான நடிப்பு மற்றும் கலகலப்பான ஆளுமையால் மக்களின் மனங்களை வென்று, ‘சூப்பர் ஸ்டார்’ என வர்ணிக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணாவின் மரணம், சினிமா துறைக்கு மிகப் பெரிய இழப்பு.

”அவரை இழந்து வாடும் அவருடைய மகன் மகேஷ் பாபு மற்றும் குடும்பத்தினர் உட்பட அவரது ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.