பர்தா அணிந்து பெண்களிடம் சில்மிஷம், வாலிபருக்கு தர்ம அடி: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

பர்தா’ அணிந்து பெண்களிடம் சில்மிஷம் வாலிபருக்கு ‘தர்ம அடி’ தந்த பொதுமக்கள்

தாவணகரே: பர்தா அணிந்து சாலையில் பெண்களின் கையை பிடித்து இழுத்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தாவணகரே ஆசாத் நகரில் நேற்று பர்தா அணிந்த ஒருவர், சாலையில் செல்லும் பெண்களின் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக பேசுவது, கையை தடவுவது போன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரிடம், ‘பெண்கள் கைகளை பிடித்து வலுக்கட்டாயமாக இழுப்பது ஏன்’ என, கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, குரலில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. எனவே அவர் அணிந்திருந்த பர்தாவை விலக்கி பார்த்தபோது, அவர் பெண் அல்ல; வாலிபர் என்பது தெரியவந்தது.

அவரிடம் ஏன் பர்தா அணிந்து ஏமாற்றுகிறாய் என கேட்டதற்கு, ”நான் பொம்மைக்கு அணிவிக்க கொண்டு சென்றேன். எனக்கு அணிந்தால் எப்படி இருக்கும் என நினைத்து அணிந்து பார்த்தேன். தவறாகி விட்டது மன்னித்து கொள்ளுங்கள்,” என்றார்.

இதை அங்கிருந்த ஒருவர், மொபைலில் வீடியோ எடுத்தார். இதனால் கோபம் அடைந்த வாலிபர், அந்த மொபைலை பறித்து கொண்டார். இதனால் அங்கிருந்தோர் ஆத்திரம் அடைந்தனர். எனவே வாலிபருக்கு ‘தர்ம அடி’ கொடுத்து ஆசாத் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள், பெண்கள் விவகாரம் என்பதால், மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவரது பெயர் சோமசேகர், 27. தாவணகரே அருகே உள்ள கல்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பல இடங்களில் இதே பர்தா அணிந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.

தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

விழுப்புரம்: தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டைச் சேர்ந்தவர் சிவானந்தன், 36; சாராய வியாபாரி. இவர் மீது, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் பல்வறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.இதையடுத்து, கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில், சிவானந்தன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாயை கொஞ்சுவதாக நடித்து அடித்து கொன்ற ‘கொடூரன்கள்’

latest tamil news

பெங்களூரு: கொஞ்சுவது போல நடித்து, இரண்டு பேர் தெரு நாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற வீடியோ சமூக வலைதளங் களில் பரவி வருகிறது.

பெங்களூரில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று, பரவி வருகிறது. அதில், ‘இரண்டு தெருநாய்கள் சாலையில் படுத்திருக்கின்றன. அதன் அருகில் இரண்டு பேர் செல்கின்றனர். ஒருவரது கையில் நீண்ட இரும்பு கம்பி உள்ளது.

‘ஒருவர் ஒரு நாயின் அருகில் சென்று கொஞ்சுகிறார். மற்றொருவர் அருகில் படுத்திருந்த மற்றொரு நாயை இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கிறார்’.

‘இதில் படுகாயம் அடைந்த நாய் துடிக்கிறது. அப்போது இருவரும் அதன் மீது தண்ணீரை ஊற்றுகின்றனர். இதில் அந்த நாய் அதே இடத்தில் உயிரிழக்கிறது. இதை பார்த்த மற்றொரு நாய் அங்கிருந்து ஓடுகிறது.

‘அதையும் இருவரும் துரத்தி செல்கின்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல், அந்த நாய் தப்பி செல்கிறது,’ அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. நாயை கொன்றது யார் என்பது தெரியவில்லை.

இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள், தெருநாயை அடித்து கொன்ற இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி உள்ளனர்.

கணவனை கொன்ற மனைவி 4 ஆண்டுக்கு பின் கைது

காஜியாபாத்: உத்தர பிரதேசத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கணவனை கொன்று 7 அடி ஆழத்தில் புதைத்த மனைவி மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்து, சிதைந்த நிலையில் இருந்த உடலை தோண்டி எடுத்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசித்தவர் சந்திரவீர். கடந்த 2018ல் இவர் கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடப்பில் இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து காஜியாபாத் எஸ்.பி., தீக்ஷா சர்மா கூறியதாவது:

சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய இருவரும் சேர்ந்து சந்திர வீரை, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். அருண் வீட்டில் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த ஏழு அடி பள்ளத்தில் சந்திரவீர் உடலை போட்டு மூடி, மேற்பரப்பில் சிமென்ட் வைத்து பூசி விட்டனர். சவிதா தன் கணவரை அவரது சகோதரர் கடத்தி விட்டதாக போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் குற்றப் பிரிவு போலீசார் மிகத்திறமையாக விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டனர். சந்திர வீரின் சிதைந்த உடல் மீட்கப்பட்டு, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கோடரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.1.70 லட்சம் வழிப்பறி

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி, 33. இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஜோதியா என்பவரும், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் இருந்து, நேற்று முன்தினம், 1.70 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றுக் கொண்டு வெங்கலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணமாக மாற்றினர்.

அங்கிருந்து பேருந்து ஏறி கல்பட்டு கிராமத்தில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது பைக்கில் வந்த இருவர், பெண்களை இடித்து விட்டு, காயத்திரியிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து காயத்ரி, பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

போதையில் தன் வீட்டை தானே கொளுத்திய காசிமேடு வாலிபர்

காசிமேடு: காசிமேடில், கஞ்சா போதையில் தன் வீட்டையே கொளுத்திய வாலிபர், மொபைல் போன் வாயிலாக தாய்க்கும் தகவல் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

latest tamil news

சென்னை காசிமேடு, ஏ.ஜெ.காலனி நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ஜாமல். இவர் தன் வீட்டின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். இவரது தம்பி அபுஹாலித், ௨௧, தாயுடன் இரண்டாவது மாடியில் வசிக்கிறார்.

அபுஹாலித் கஞ்சா போதைக்கு அடிமையானதால், அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் இவர் கஞ்சா போதையில் இருந்த போது, இவரது தாய் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது, அபுஹாலித்மொபைல் போனில் தாயை அழைத்து, வீட்டைக் கொளுத்திவிட்டதாகக்கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த இவரது தாய் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்த போது, வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.

இதுகுறித்த புகாரின்படி விரைந்து வந்த ராயபுரம் தீயணைப்பு வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர், அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட மரச் சாமான்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் எரிந்து நாசமாயின.

அபுஹாலித் வீட்டில் இருந்து வெளியேறியதால், உயிர் சேதம் இல்லை. சம்பவம் குறித்து, ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.