ஜி – 20 மாநாட்டில் மேற்கத்திய நாடுகளுக்கு பிரதமர் மோடி. சூடு! . எரிபொருள் தடையால் மக்களுக்கு நேரடி பாதிப்பு என பேச்சு

பாலி :உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு, ‘ஜி – ௨௦’ மாநாட்டில் பிரதமர் மோடி சரியான சூடு வைத்தார். ”எரிபொருள் தடையால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது,” என, அவர் குறிப்பிட்டார்.

‘ஜி – 20’ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை, வரும், டிச., ௧ம் தேதி இந்தியா ஏற்க உள்ளது. அடுத்தாண்டு கூட்டம், புதுடில்லியில் நடக்க உள்ளது.

இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, உலகெங்கும் பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

தீர்வு காண வேண்டும்

இந்நிலையில், தள்ளுபடி விலையில் இவற்றை வழங்க ரஷ்யா முன் வந்தது. இதன்படி, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் பெட்ரோல், டீசலை வாங்கி வருகிறது.

ரஷ்யாவுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் வகையில், அதனிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், பாலியில் நேற்று நடந்த கூட்டத்தில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.ஜி – ௨௦ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த நுாற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு, உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது, ‘எந்தப் பிரச்னையையும் அமைதியான வழியில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்’ என, உலகத் தலைவர்கள் கூறினர்.

ஏற்கனவே கொரோனா, சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி என பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், அதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

உக்ரைன் விவகாரத்தில், போரை நிறுத்தி பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை துவக்கத்தில் இருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகம் முழுதும் அமைதி, உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.

புத்தர், காந்தி பிறந்த புனித பூமியான இந்தியாவில் அடுத்தாண்டு நடக்கும் கூட்டத்தில், உலக அமைதிக்கான வலுவான செய்தியை நாம் கொடுக்க வேண்டும்.கொரோனா வைரஸ் காலத்திலும், நாட்டு மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக இலவச உணவுப் பொருட்களை வழங்கினோம்.

கூட்டு முயற்சி தேவை

எரிபொருள் பாதுகாப்பு என்பது உலக வளர்ச்சிக்கு அடிப்படையாகும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு என்பது உலகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்தியா வளர்ந்தால்தான், உலக நாடுகளும் இணைந்து வளர முடியும்.

இந்த நேரத்தில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் வினியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இதில் எந்தக் கட்டுப்பாடும், எதிர்ப்பும் இருக்கக் கூடாது.

உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், நாளை உணவுப் பிரச்னை ஏற்படும். இது ஒரு சுழற்சி, சங்கிலி. இந்த நேரத்தில், பொருட்கள் வினியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தீர்வை நாம் அளிக்க வேண்டும்.

எரிபொருள் வினியோகம் தடைபட்டதால், அத்தியாவசியப் பொருட்கள் விலைகள் உயர்ந்து, உலகம் முழுதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வரும் நிலையில், ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றக் கூடாது.

தற்போதைய சூழ்நிலையில், உலகெங்கும் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை உறுதி செய்ய, உறுதியான கூட்டு முயற்சியே தேவை.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.