ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2.50 கோடி வழங்கினார்…

சென்னை:  அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகஅரசு சார்பில்  ரூ. 2.50 கோடி காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவரிடம் இந்த காசோலை வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (15.11.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக விருதுகள் வழங்குதல், திருவுருவச் சிலைகள் அமைத்தல், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உலகெங்கும் தமிழ் மொழியின் சிறப்பினைப் பரப்பிடும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட, கோரிக்கைக்கேற்ப தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஐம்பதாண்டு காலமாகத் தமிழ்ப் பண்பாட்டினை சீரோடும் சிறப்போடும் போற்றிப் பாதுகாத்து வரும் அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்படி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு 3 இலட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி. விருதுஇந்திய விடுதலைப் போரில் மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி எழுச்சி பெறச் செய்த பெருமைக்குரிய கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பெயரில், அன்னாரின் 150ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு 3.9.2021 அன்று உருவாக்கப்பட்ட புதிய விருதினை  முதன்முதலாக, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் வெட்டிக்காடு கிராமத்தில் கருநேசன் தொண்டைமான்-கமலம் இணையரின் மகனாக பிறந்து 33 ஆண்டுகளாகத் துறைமுகம் மற்றும் சரக்குப் பெட்டகத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திப் பெட்டக ஏற்றுமதி – இறக்குமதியை எளிதாக்கியதோடு. மும்பை, முந்தரா, சென்னை, காமராசர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி பல சாதனைகளைச் செய்தவருமான கப்பல் பொறியியல் தொழில்நுட்ப வித்தகர் பொறிஞர் எண்ணரசு கருநேசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.

வ.உ.சி. விருது பெறும் எண்ணரசு கருநேசன்இந்நிகழ்வில், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.