100 இல் 7 கூட தமிழ்நாட்டுக்கு இல்லையா? – ராமதாஸ் வேதனை!

நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் இதில் தமிழ்நாட்டுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து

நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்துடன் மத்திய அரசு நிதியுதவியுடன் ஏற்கெனவே இயங்கிவரும் 157 மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகளையும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் தமிழகத்துக்கு குறைந்தது 16 மருத்துவக் கல்லூரிகளாவது வந்திருக்க வேண்டும். ஆனால் 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ்நாட்டுக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகூட கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு 15 கல்லூரிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று 2019 ஆகஸ்ட் மாதமே வலியுறுத்தி இருந்தேன்.

அதையடுத்து முந்தைய அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு அது போதுமானதாக இல்லை. அதற்கு இன்னும் ஆறு மருத்துவக் கல்லூரிகள் தேவை. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க ஆறு கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று திமுக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அனைத்து கல்லூரிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டதால்,, தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதும் இங்குதான்; அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் பயில விரும்புவதும் தமிழகத்தில் தான்; கடந்த முறை ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை குறித்த காலத்தில் கட்டமைத்து வகுப்புகளைத் தொடங்கியதும் தமிழ்நாடு தான். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உள்ளது.

எனவே மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ள 100 மருத்துவக் கல்லூரிகளில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களுக்கு ஆறு, கடலூர் மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.