இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது: பிரதமருக்கு நினைவூட்டிய அமைச்சர்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 11,12 தேதிகளில் தொடார்ந்து பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சீர்காழியில் வரலாறு காணாத வகையில் சுமார் 112 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலே அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன, வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை போன்றோரும் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், சீர்காழி அடுத்த கொடிக்கால்வெளி கிராமத்தில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த குடியிருப்புகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு, கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தே, வெள்ள நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றார். மேலும் மாநில அரசு தன் பங்கிற்கு என்ன செய்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு எந்த சிறப்பு நிதியும் வழங்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் விளக்கமளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்குள்தான் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிமிடம் வரை பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இதுவே வடமாநிலமாக இருந்திருந்தால், பிரதமர் மோடி உடனடியாக பார்வையிட்டு அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பார் என்றார்.

எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கீடும் இதுவரை செய்யாத நிலையில் அண்ணாமலை உன்மைக்குப் புறமாகப் பேசி வருவதாக தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.