காசி தமிழ்ச் சங்கமம் பிரதமர் நாளை தொடங்கிவைக்கிறார் – இளையராஜா இன்னிசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி

புதுடெல்லி: வாரணாசியில் நாளை காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைக் கிறார். இளையராஜா இன்னிசையுடன் பிரம்மாண்டமான முறையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாதமான கார்த்திகை முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியை நாளை (நவ. 19) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். இதில், இசையமைப்பாளர் இளையராஜாவின் தமிழிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது. சுமார் 3 மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இளையராஜா குழுவினரின் இசையை ரசிக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன்
எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக 3 ரயில்களில் 650 தமிழர்கள், தமிழகத்திலிருந்து நேற்று வாரணாசி புறப்பட்டுள்ளனர். தமிழர்களை வரவேற்க பிரதமர் மோடி நாளை நேரடியாக வாரணாசி ரயில் நிலையத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுபோல, மேலும் 4 குழுவினர் அடுத்தடுத்து வாரணாசிக்குச் செல்ல உள்ளனர். வாரணாசி முழுவதும் தமிழ்ச் சங்கமம் தொடர்பான, தமிழால் எழுதப்பட்ட வரவேற்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக தேசிய தலைவர்கள் சிலர் கூறும்போது, “கோவையில் திமுக நடத்திய செம்மொழி மாநாட்டை மிஞ்சும் வகையில், தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. இதன் மீது தமிழகத்தில் சர்ச்சைகள் எழுவதைத் தவிர்க்கவே, நிகழ்ச்சிக்கான ஏற்பாடு குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கருதி, தமிழக அரசு இதில் கலந்துகொள்ளவில்லை என்று கருதுகிறோம்” என்றனர்.

இதற்கிடையில், வாரணாசி வரும் தமிழர்களைக் கவர, அங்கு பாரதியார் தங்கியிருந்த வீட்டில் நினைவகம் அமைக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் வாரணாசி வந்த தமிழக செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், பாரதியார் இல்லத்துக்கு மட்டும் சென்றுவிட்டு, டெல்லிக்குப் புறப்பட்டார். பாரதியார் நினைவகத்தை ஒரு வாரத்தில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பாரதியார் தங்கியிருந்த வீட்டை நினைவகமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்தது. இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த தருண் விஜய், திரளான பாஜகவினருடன், வாரணாசியில் தற்போது பாரதியாரின் பேரன் கே.வி.கிருஷ்ணன் (96) வசிக்கும் அந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். ஆனால், குடும்பத்துடன் வசித்து வருவதால், அந்த வீட்டைத் தர கே.வி.கிருஷ்ணன் மறுத்துவிட்டார். எனினும், தமிழக அரசு அவரிடம் பேசி, ஓர் அறையை மட்டும் நினைவகமாக மாற்றுகிறது.

நேரலையாக ஒளிபரப்பு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்ய சுற்றறிக்கையில், “வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இங்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தவிர, கலாச்சாரம், கல்வித் துறைகள், பதிப்பகங்கள் என பல்வேறு தரப்பினரும் கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார். இந்த தொடக்க நிகழ்வை மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் நேரலையாக கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்து யுஏஎம் இணைய முகப்பில் பதிவேற்றவும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.