ESA: உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரரானார் ஜான் மெக்பால்; குவியும் பாராட்டுகள்!

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2021ம் ஆண்டு விண்வெளி வீரர் பணிகளுக்கானக் காலியிடங்களை அறிவித்திருந்தது.

இதில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளி விண்வெளி வீரர்களுக்காக காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அதற்கு அப்பால் பயணம் செய்யும் இந்த ஐரோப்பிய விண்வெளி வீரர் குழுவில் சேர ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 22,000க்கும் மேற்பட்டோர் முறையாக விண்ணப்பித்திருந்தனர். மேலும், மாற்றுத்திறனாளி விண்வெளி வீரர்களுக்கான காலியிடங்களுக்கு 257பேர் முறையாக விண்ணப்பித்திருந்தனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 17 ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் (2022)

இதில், 1361 விண்வெளி வீரர்களுக்கான விண்ணப்பங்களும், 27 மாற்றுத்திறனாளி விண்வெளி வீரர்களுக்கான விண்ணப்பங்களும் தேர்வு செய்யப்பட்டு பல கட்டமான முறையில் தேர்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் நேற்று (23.11.2022) பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற ESA கவுன்சிலில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 17 ஐரோப்பிய விண்வெளி வீரர்களை அனைவரது முன்னிலையிலும் அறிமுகப்படுத்தார் ESA டைரக்டர் ஜெனரல் ஜோசப் ஆஷ்பேச்சர்.

இதில், ஜான் மெக்பால் (John McFall) என்பவர் ஐரோப்பிய விண்வெளி வீரர் குழுவின் விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டு முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரர் என்ற பெருமையை சூடிக்கொண்டார்.

ஜான் மெக்பால்

ஜான் மெக்பால், தனது 19வது வயதில் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தினால் தனது வலது காலை இழந்துவிட்டார். பின்னர், செயற்கைக் கால் பொருத்திக் கொண்ட அவர், தடகள விளையாட்டு வீரராக பாராலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்குபெற்று பல விருதுகளைத் தன் வசமாக்கி மிளிந்தார். அதன் பிறகு மருத்துவம் பயின்ற அவர், தனது மருத்துவப் படிப்புகளுடன், புதுமையான பாராலிம்பிக் இன்ஸ்பிரேஷன் திட்டத்திற்கு வழிகாட்டியாக பணியாற்றி வந்தார். இதன் மூலம் பல மாற்றுத்திறனாளி வீரர்களுக்குப் பல்வேறு உதவிகள் செய்து ஊக்குவித்தார். பின்னர் 2012ம் ஆண்டு லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தூதராகவும் இணைப்பாளராகவும் பொறுப்பு வகித்திருந்தார்.

ஜான் மெக்பால் (ESA-விண்வெளி வீரர்)

அதுமட்டுமின்றி, 2014 முதல் 2016 வரை, ஜான் பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவையில் அறக்கட்டளை டாக்டராகவும், இங்கிலாந்தின் தென்கிழக்கு வேல்ஸில் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவராகவும் பணியாற்றினார். மேலும், 2016 மற்றும் 2018 ம் ஆண்டில், UK வெசெக்ஸ் டீனரியில் பொது அறுவை சிகிச்சை, சிறுநீரகம் மற்றும் அதிர்ச்சி மற்றும் எலும்பியல் ஆகியவற்றை உள்ளடக்கிய கோர் அறுவை சிகிச்சை பயிற்சியை முடித்து இங்கிலாந்தின் தேசிய அதிர்ச்சி மற்றும் எலும்பியல் நிபுணர் பதிவாளர் பயிற்சித் திட்டத்தில் வெற்றிகரமாக ஒரு இடத்தைப் பெற்றார்.

இப்படி தடகள வீரராக மற்றும் மருத்துவராகப் பல சாதனைகள் படைத்து வரும் ஜான் மெக்பால், தற்போது ஐரோப்பிய விண்வெளி வீரர் குழுவின்(2022) விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜான் மெக்பாலின் இந்த வெற்றி மாற்றுத்திறனாளிகள் விண்வெளி வீரர்களாக பணியாற்றுவதில் இருக்கும் தடைகள் பற்றிய பலரின் புரிதலை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளிகள் எந்தத் துறையிலும் சாதனை படைக்கலாம் என்பதற்கு ஓர் முன்னுதாரணமாக இருக்கும் என்று பலரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துகள் ஜான் மெக்பால்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.