'அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி' – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி உள்ளார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதே போல், டெல்லி மாநகராட்சித் தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜகவுக்கு போட்டியாக, ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்து உள்ளது.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதா, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஆகியவற்றில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் சூழல் நிலவுவதால், பாஜக கடும் விரக்தியில் உள்ளது. இந்த தோல்வி பயத்தின் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக பயங்கர சதித் திட்டம் தீட்டி உள்ளது.

குறிப்பாக, டெல்லி பாஜக எம்பி மனோஜ் திவாரி மூலமாக இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் போடப்பட்டு உள்ளது. தனது ஆதரவு ரவுடிகளிடம் இந்த வேலையை எம்பி மனோஜ் திவாரி ஒப்படைத்துள்ளார். இந்த நேரத்தில் பாஜகவுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். உங்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு ஆம் ஆத்மி என்றும் பயப்படாது. பாஜகவின் அராஜகத்துக்கும், ரவுடிகளுக்கும் மக்கள் விரைவில் பதில் அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை, பாஜக திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இது தொடர்பாக, பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறியதாவது:

அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தே கருத்து தெரிவித்தேன். அவரது கட்சி எம்எல்ஏக்களை அவர்களை தாக்குகின்றனர். தொண்டர் கொலை செய்யப்பட்டார். இது போன்ற சூழ்நிலைகள் கவலையை தருகிறது. கொலை மற்றும் மிரட்டல் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கதை மிகவும் பழையது. ஆண்டுகள் மாறினாலும் அவர்கள் ஒரே குற்றச்சாட்டை கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.