புதுச்சேரி | மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள்

புதுச்சேரி: ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.

தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும். 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் கோவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆண்டுதோறும் புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று திரும்பும்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால் இந்த ஆண்டு கோவில் நிர்வாகம், வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமிக்கு அது தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில் 15 நாட்கள் ஓய்வெடுக்க அனுமதித்தது. நீரிழிவு நோயால் காலில் புண்ணும் லட்சுமிக்கு ஏற்படும். ‌

ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை. பார்வையாளர்கள் பார்க்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் யானையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. தமிழக வனத் துறை மருத்துவர்கள் பரிசோதித்த பின், யானை லட்சுமி கோவிலுக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை லட்சுமியின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயில் இருப்பிடத்தில் இருந்து நடை பயணம் சென்றது. அப்போது கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்தது சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லியுள்ளனர்.

மக்களுக்கு மிகவும் நெருக்கமான லட்சுமி யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு சடங்குகள் நிகழ்த்திய பிறகு மாலையில் முத்தியால்பேட்டை பஜனை மட வீதி இடத்தில் நல்லடக்கம் நிகழும் என்று தகவல்.
இந்நிலையில், மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டு யானை லட்சுமி பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.