100 வார்டுகள்… த்ரீ ஸ்டார் அங்கீகாரம்… அடுத்த சம்பவத்திற்கு ரெடியான கோவை மாநகராட்சி!

கோவை மாநகராட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூன்று நட்சத்திர அங்கீகாரம் பெற எடுக்கப்பட்டு வரும் முயற்சி கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் ”தூய்மை பாரத திட்டம் 2.0 திடக்கழிவு மேலாண்மை” என்ற திட்டத்தின் கீழ் ஸ்டார் ரேட்டிங் (Star Rating) அங்கீகாரமானது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டார் ரேட்டிங் அங்கீகாரம்

இந்த ஸ்டார் ரேட்டிங் பெற கோவையும் களமிறங்கியுள்ளது. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் அனைத்தும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி முறையே தரம் பிரித்து கையாளப்பட்டு வருகிறது. இதன்மூலம் தூய்மையான மாநகராட்சி என்ற இலக்கை எட்டி கொண்டிருக்கிறது. எனவே கோவை மாநகராட்சிக்கு குப்பைகள் இல்லா மாநகராட்சியாக மூன்று நட்சத்திர அங்கீகார சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக வந்து தெரிவிக்கலாம்

கோவை மக்கள் இதுதொடர்பாக தங்களது ஆட்சேபனைகள், கருத்துகளை தெரிவிக்கலாம். 15 நாட்களுக்குள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை வழங்கலாம். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பழம்பெருமை வாய்ந்த கோவை

கோவை மிகவும் பழம்பெருமை வாய்ந்த நகரம். 1804ஆம் ஆண்டு கோவை மாவட்டத்திற்கு தலைநகராக கோவை மாநகர் நிறுவப்பட்டது. 1848ல் நகராட்சியாக மாறியது. 1981ல் சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்துக் கொண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதிலிருந்து கோவையின் வளர்ச்சி வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

மாநகராட்சியாக தரம் உயர்வு

தென்னிந்தியாவில் 4வது மிகப்பெரிய மாநகராட்சி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. வர்த்தக தலைநகரம் மும்பைக்கு அடுத்தபடியாக அதிக தொழில் முதலீடுகளை பெறுவதில் கோவைக்கு முக்கிய பங்குண்டு. கடந்த 2011ஆம் ஆண்டு மாநகர எல்லையை விரிவாக்கம் செய்தது முக்கியத்துவம் பெற்றது. மக்கள்தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி,

பெருநகர வளர்ச்சி குழுமம்

மாநகராட்சி பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2013ல் பெருநகர மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. தற்போது மேற்கு, கிழக்கு, மத்திய, வடக்கு, தெற்கு என ஐந்து மிகப்பெரிய மண்டலங்களை கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மண்டலங்களை கொண்டிருப்பது கோவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் கோவை மாநகரின் வளர்ச்சி பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது உள்கட்டமைப்பு, சுகாதாரமான குடிநீர், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பான சுற்றுச்சூழல், கல்வி ஆகியவற்றுக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.