பிரதமர் வீட்டு வசதி திட்டம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தகுதியில்லாதவர்களுக்கி வீடுகள் ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியகளுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை சேர்ந்த சேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் கையாடல் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் பிறப்பிக்க தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிகள், தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு மற்றும் வேலை உறுதி திட்ட நிதியில் கையாடல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவதால், இதை தீவிரமாக கருத வேண்டுமெனவும், ஊரக வளர்ச்சி துறை செயலளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர்.

பின்னர், சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வீடு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உண்மை தன்மை குறித்து சரிபார்க்கவும், வேலை உறுதி திட்ட நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்திற்கு குறையாத அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.