ஆளுநர் உடனேயே கையெழுத்து போடவேண்டிய அவசியம் இல்லை – தமிழிசை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.  இதனை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் அவசர கால மசோதா கொண்டு வரப்பட்டது.  பின்பு அனுமதிக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.  ஆனால் தமிழக ஆளுநர் இதற்கு கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்து வந்தார். இதனால் அவசரகால மசோதா செல்லுபடியாகாமல் போனது.  தமிழகம் முழுவதும் இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது.  அப்போது பேசிய அவர், “ஒரு ஆளுநருக்கு மசோதா (ஆன்லைன் ரம்மி) வந்தால் உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்பது கிடையாது. 

சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதற்கான ஆலோசனை செய்வதற்கான நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.  ஆளுநர் என்றால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடனடியாக மசோதாவில் கையெழுத்து போட வேண்டும் என்பது இல்லை.  இதை காலதாமதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது” என்றார்.  தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்து ஆளுநர் என்ற அடிப்படையில் உங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்பப் பெறுவது என்று கேட்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்பது எனது கருத்து.  

இந்த கருத்திற்கு சமூக வலைதளத்தில் எனக்கு இப்போது விமர்சனம் வரும்.  ஒரு ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவரை வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கக் முடியாது, இது ஜனநாயக நாடு. இதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.