காசி தமிழ்ச் சங்கமம் அரங்கில் திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பு நூலுக்கு வரவேற்பு

புதுடெல்லி: உலகத் திருமறையாகக் கருதப்படும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மத்திய அரசால் மொழி பெயர்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் விருப்பப்படி, இதை இந்திய, சர்வதேச அளவில் 100 மொழிகளில் வெளியிட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிறுவனத்தின் 13 மொழிகளிலான திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் நவம்பர் 19-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். இதில், இந்தி மொழியில் வெளியான திருக்குறள், வட மாநிலத்தவர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு மாதத்திற்கான சங்கமம் நிகழ்ச்சியானது, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதனுள் சுமார் 70 அரங்குகள் கொண்ட பொருட்காட்சியும் அமைந்துள்ளது. இதில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அரங்கில் வைக்கப்பட்ட நூல்களில் திருக்குறள் அதிகமாக விற்பனையாகின்றன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் இந்நூலை மொழிபெயர்த்த தமிழ் மற்றும் இந்தி மொழி அறிஞரான முனைவர்.எம்.கோவிந்தராஜன் கூறியதாவது. இதற்கு முன் பலரால் திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்புகள் வெளியாகி உள்ளன. அவ்வாறு, வெளியானவற்றில் ஒன்றில் மூலம் இருக்காது, மூலம் இருந்தால் ஒலி மாற்றம் இருக்காது. ஒலி மாற்றம் இருந்தால் செய்யுள் வடிவ மொழி பெயர்ப்பு இருக்காது, செய்யுள் வடிவம் இருந்தால், உரைநடை விளக்கம் இருக்காது. ஆனால் மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்நூல், முழுமையான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் மூலம், அதன் கீழ் இந்தியில் அதன் ஒலி மாற்றம், அதன் கீழ் இந்தியில் செய்யுள் வடிவில் மொழி பெயர்ப்பு, அதனைத் தொடர்ந்து அதன் உரைநடை விளக்கம் என்று முழுமையான வடிவம் பெற்றுள்ளது. தவிர 1926-ல் இருந்து இன்று வரை வெளிவந்த பல்வேறு இந்தி மொழிபெயர்ப்பு பற்றிய தகவல்கள் திரட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழின் சிறப்பு, தமிழர்கள் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவம், தொல்காப்பியம் முதல் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய அனைத்து சங்க நூல்கள் பற்றிய விவரங்கள், திருக்குறள் பற்றி பண்டைய நூல்களில் பண்டைய புலவர்கள் கூறியுள்ள கூற்றுகள், திருக்குறள் பொருள் விளக்கம், அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால் பற்றிய தனி விளக்கம், திருக்குறளின் தனிச்சிறப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

திருக்குறள் மொழி பெயர்ப்பு மட்டும் இன்றி தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் பற்றியும் இந்தியில் எடுத்துக் கூறி, தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் இடமும், முக்கியத்துவமும் என்ன என்பதை விளக்கிக் கூறும் சிறப்பு மிக்க மொழி பெயர்ப்பாகவும் அமைந்துள்ளது அதன் சிறப்பு. இவ்வாறு முனைவர் எம்.கோவிந்தராஜன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.