“மதுரையின் ஓர் அடையாளமாகவே மாறியவர் ஓவியர் மனோகர் தேவதாஸ்” – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: பிரபல ஓவியரும், எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் (86) விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.

மரபுக் கட்டடங்களை ஓவியமாக வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் மனோகர் தேவதாஸ். தமது முப்பது வயதிலேயே ரெட்டினிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வைத் திறனை இழந்து வந்தாலும் ஊக்கம் சற்றும் குறையாமல் தமது கலைப்பணியையும் எழுத்துப் பணியையும் அவர் மேற்கொண்டார் என்பது போற்றத்தக்கது.

கோயில் பகுதிகள், வீதிகள், புகழ்வாய்ந்த கட்டடங்கள், வைகை ஆறு, இயற்கை எழில் கொஞ்சும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என மதுரை மண்ணின் அடையாளங்களை மிக அழகாகத் தீட்டியதால் மனோகர் தேவதாஸும் மதுரையின் ஓர் அடையாளமாகவே மாறிப்போனார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தபோது கூட, மனோகர் தேவதாஸின் Multiple Facets of Madurai என்ற நூலினைத்தான் நான் அன்பளிப்பாக வழங்கியிருந்தேன். தனது காதல் மனைவி மஹிமா பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, கிராமப்புற மக்களின் கண் சிகிச்சைக்கு உதவியதன் வழியே கலைஞராக மட்டுமின்றி உயர்ந்த மனிதராகவும் மனோகர் தேவதாஸ் தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது துணைவியாரை அவரது இறுதிக்காலம் வரை அன்புடன் கவனித்துக்கொண்ட மிகச் சிறந்த காதலனாக, கணவனாக, மதுரையின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத மண்ணின் மைந்தனாக, பார்வைக்குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் சாதித்த ஒப்பற்ற ஓவியக் கலைஞனாக, பல நூல்களைப் படைத்த எழுத்தாளராக, அறப்பணிகளை மேற்கொண்ட மனிதநேயராக எனப் பல வகைகளிலும் ஓர் எடுத்துக்காட்டாகப் பெருவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார் மனோகர் தேவதாஸ் .

அன்னாரின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள கலைத்துறை நண்பர்கள், உறவினர்கள், மதுரை மக்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.