உண்ணாவிரதம் மேற்கொண்ட ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவர் ஷர்மிளாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ஐதராபாத்: தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப் பட்டதற்கு எதிராக காலவரையின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இளைய சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்தாண்டு ஜூலையில் தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிறந்த நாளில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை தொடங்கினார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இவர் தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகிறார்.

கடந்த மாதம் இறுதியில் வாரங்கல் மாவட்டத்தில் இவர் பாத யாத்திரை மேற்கொண்டபோது, இவரது ஆதரவாளர்களுக்கும், தெலங்கானா ராஷ்டிரய சமிதி கட்சியினருக்கும் இடையே மோதல் நடந்தது.

வீடியோ வைரல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த ஷர்மிளா, முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லம் நோக்கி புறப்பட்டார். இதை தடுத்த போலீஸார் அவரது வாகனத்தை கிரேன் மூலம் இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது.

பாத யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர், உசைன் சாகர் ஏரி அருகேயுள்ள அம்பேத்கர் சிலை முன்பு கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், இவர் தனது கட்சி தலைமையகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

தண்ணீர் கூட குடிக்காமல் அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால், அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில், அவரை போலீஸார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஷர்மிளாவின் ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு ஆகியவை மிகவும் குறைந்து விட்டதாகவும், அவருக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமாக பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உண்ணாவிரதம் நடத்தப்பட்ட இடத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கலைந்து செல்லும்படி போலீஸார் கட்டாயப்படுத்தியதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.