மதுபான கொள்கையில் புதுச்சேரி பாஜகவின் நிலைப்பாடு என்ன? -அதிமுக சாட்டையடி கேள்வி!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதனை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில், ‘புதுச்சேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

மக்கள் விரோத திமுக, காங்கிரசை விரட்டி அடிக்க வேண்டும் என எண்ணத்துடன் இந்த கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் மாபெரும் ஆதரவை அளித்து வெற்றி பெறச்செய்தனர். என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளை நெருங்க உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்ஆர்.காங்கிரஸ் அரசும், கூட்டணியின் முதலமைச்சரும் மதுபான கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு, கூடுதலாக மேலும் 10 மதுபான , சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மதுபார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்கப்படுகிறது. என்ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கும், சாராய முதலாளிகளுக்கும் சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுச்சேரியில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுச்சேரியின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

இந்த விஷயத்தில் புதுச்சேரி மாநில பாஜக நிலைப்பாடு என்ன? தேசிய அளவில் பாஜகவின் கொள்கை மதுபானத்தை முற்றிலுமாக ஒழிப்பதுதான். நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பாஜகவின் தேசிய கொள்கை. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மதுபார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது.

ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல் கட்சிகளின் தலையாய கடமை. எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுச்சேரி மாநில பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று தமது கடிதத்தில் வையாபுரி மணிகண்டன் கேட்டு கொண்டுள்ளார்.

புதுடெல்லியில் ஆம் ஆத்மி அரசு அண்மையில கொண்டு வந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, அந்த மாநில துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவின் வீடு , அலுவலகங்களில் அமலாக்கத் துறை அண்மையில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடமும் அமலாக்கத் துறை நேற்று விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில், கூட்டணி கட்சி என்ற முறையில் புதுச்சேரி அரசின் மதுபான கொள்கையில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.