குஜராத் முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர படேல்: அமைச்சரவையில் யாருக்கு இடம்?

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

குஜராத்தில் ஆட்சியமைக்க 92 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக பெரும்பான்மை பெற்றது. குஜராத் மாநிலத்தில் 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுவே அதிக தொகுதிகளில் ஒரு கட்சி அம்மாநிலத்தில் வெற்று பெற்ற வரலாற்று சாதனையாக இருந்தது. அதனை 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறியடித்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை மிகவும் மோசமாக தோல்வியடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரும் சவாலாக இருக்கும் என கூறப்பட்டது. அதன்படியே அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு வெறும் 5 இடங்களே கிடைத்தன. இருப்பினும், அக்கட்சியின் வாக்கு பகிர்வு சுமார் 13 சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குஜராத் மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், குஜராத் சட்டமன்ற பாஜக கட்சித் தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவர் ஆளுநரிடம் அளித்தார். அதனையேற்று, ஆட்சியமைக்க பூபேந்திர படேலுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, குஜராத்தின் 18ஆவது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதன் மூலம், குஜராத்தில் 7ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் பூபேந்திர படேல் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 60 வயதான பூபேந்திர படேல் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜய் ரூபானிக்கு பதிலாக பொறுப்பேற்றார். அதனைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக தற்போது குஜராத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

பூபேந்திர படேல் உடன் இணைந்து 17 பேர் குஜராத் மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அதன்படி, ஓபிஎஸ் சமூகத்தை சேர்ந்த 7 பேரும், பட்டிதார் சமூகத்தை சேர்ந்த 4 பேரும், எஸ்.டி சமூகத்தை சேர்ந்த 2 பேரும், எஸ்.சி. பிராமணர், ஜெயின், ராஜ்புட் சமூகங்களை சேர்ந்த தலா ஒருவரும் பூபேந்திர படேல் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பல்வந்த் சின்ஹ் சந்தன்சின்ஹ் ராஜ்புட், குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா, கனு தேசாய், குபேர் டின்டோர், பானுபென் பாபரியா ஆகியோர் கேபினர் அமைச்சர்களாகவும், ஹர்ஷ் சங்வி (தனி பொறுப்பு), புருஷோத்தம் சோலன்கி, பச்சுபாய் கபாட், முகேஷ் படேல், குன்வர்ஜி ஹல்பதி ஆகியோர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.