இருள் போல துன்பங்களை அனுபவிப்பவர்களுக்கு இன்பக்காலம் விடியும் மாதமே மார்கழி..!!

மாதங்களில் சிறந்த மாதம்… மார்கழி. கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று மாதவனால் பெருமை பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்வதில் மார்கழி மாதம் முக்கியத் துவம் பெறுகிறது. ஆடியில் தெய்வ வழிபாடு… புரட்டாசியில் பெருமாள் வழிபாடு.. ஆனால் மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட உகந்த மாதம். வருடம் முழுவதும் கோயிலுக்கு போன பலனை இந்த மாதம் நமக்கு தருகிறது.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இவர்களது பகல் பொழுது உத்தராயணம் என்றும்,இராப்பொழுது தட்சணாயனம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரையில் பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவாகவும் கூறுவார்கள். தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் காலமே மார்கழி மாதம். அக்காலத்தைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கிறோம். தை மாதங்களுக்கு முந்திய மாதம் மார்கழி செவ்வானக் காலமாகவும் சொல்லப்படுகிறது. இருள் போல துன்பங்களை அனுபவிப்பவர்களுக்கு வெளிச்சம் என்னும் இன்பக்காலம் விடியும் மாதமே மார்கழியாம். வடமொழியில் மார்கசீர்ஷம் என்று மார்கழி மாதத்தைச் சொல்வார்கள். மார்கம் என்றால் வழி, சீர்ஷம் என்றால் உயர்ந்த. அதாவது உயர்ந்த வழிகளுக்குள் தலைசிறந்தது என்று பொருள்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி எம்பெருமானின் அருளைப் பெற வேண்டும் என்று ஆண்டாள் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர் என்று கூறியுள்ளார். திரு வெம்பாவையில் மாணிக்கவாசகரும் போற்றி யாம் மார்கழி நீர் ஆடலோர் எம்பாவாய் என்று மார்கழி நீராடலைப் பற்றி கூறுகிறார். என்றும் பதினாறு மார்க்கண்டேயர் இந்த மார்கழி மாதத்தில் தான் பிறந்தார். அதனால் மரணத்தையே வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் சொல்கிறது.

மனத்தூய்மையே இறைவனது இருப்பிடம் என்பதை உணர்த்தவே கலியுகத்தில் ஆண்டாள் கடுமையான விரதமிருந்து மார்கழி மாதம் முப்பது நாட்களும் இறைவனை நினைத்தே அவனை துணையாகவும் ஆட்கொண்டு விட்டாள். தூய்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை அடைய முடியும் என்று நிரூபித்துவிட்டாள். மார்கழி வழிபாட்டில் கோயில்களில் அதிகாலையில் இறைவனை வழிப்படும்போது வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்களே பாடப்படுகின்றன. விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவார்கள். புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திலும் கூட சுப்ரபாதம் பதிலாக ஆண்டாளின் திருப்பாவையைத்தான் பாடுவார்கள். சிலர் மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்வார்கள். அது பீடு மாதம் பீடு என்றால் பெருமை என்று பொருள். இவைதான் நாளடைவில் மருவி பீடைமாதமாகிற்று. ஆனால் மார்கழி மாதம் முழுவதும் இறைனை மட்டுமே நினைத்து பூஜித்து வந்தால் இறைவனது அருகாமை எளிதில் கிட்டும். இப்பேற்றை அடைய மார்கழியை வரவேற்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.