காங்கிரஸ்தான் மதவாத அரசியல் செய்கிறது: பாஜக விமர்சனம்

பெங்களூரு,

காங்கிரஸ்தான் மதவாத அரசியல் செய்வதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். கர்நாடக பா.ஜனதா மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

திப்பு ஜெயந்தியை கொண்டாடிய ஒரு மாதவாத தலைவர் சித்தராமையா. தான் சுத்தமானவர் என்று கூறிக்கொள்ள அதற்கு சுத்தமாக இருக்க வேண்டும். சித்தராமையா சுத்தம் இல்லாதவர். ஒரு சமூகத்திற்கு மட்டும் திட்டங்களை தீட்டுபவர் மதவாத தலைவர் ஆகிறார். ஷாதி பாக்கிய, பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா போன்ற திட்டங்களை சித்தராமையா எந்த சமூகத்திற்காக அமல்படுத்தினார்?.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பா.ஜனதா அரசுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தான் மதவாத அரசியல் செய்கிறது. நாங்கள் வளர்ச்சி அரசியல் செய்கிறோம். சமூகங்களை உடைக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம். இதை சித்தராமையா புரிந்து கொள்ள வேண்டும். சித்தராமையா என்று அவருக்கு அவரது தந்தை பெயர் சூட்டினார். ஆனால் அவருக்கு மக்கள் சித்தராமுல்லா கான் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த பெயரை நான் சூட்டியது அல்ல, அது மக்கள் சூட்டிய பெயர். குங்கும், காவியை கண்டால் தனக்கு பயம் என்று சொன்னவர் சித்தராமையா. ஒரு சுத்தமான இந்து இவ்வாறு கருத்துகளை கூற மாட்டார். நாங்கள் எப்போதும் காவியை தான் கையில் பிடிக்கிறோம். கர்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.

இவ்வாறு சி.டி.ரவி பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.