ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வீரர்களை வாங்க முயற்சிக்கும் – அனில் கும்ப்ளே

மும்பை,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும். இதையொட்டி ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

இந்த நிலையில் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 405 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இதில் 273 பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 4 பேர் உறுப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் உடையவர்கள். 282 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்கள். உறுப்பு நாட்டை சேர்ந்த 4 வீரர்களும் இதில் அடங்குவார்கள்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்க ஆர்வம் காட்டும். ஒவ்வொரு அணியும் தங்களுக்கு எந்த வீரர் தேவை என்பதை தேர்ந்தெடுக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வீரர்கள் தேவைப்படுவார்கள் எனவும், மும்பை அணி இந்த வீரர்களை ஏலத்தில் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. கார்த்திகேயா கடந்த ஆண்டு அவர்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர்களுக்கு அனுபவமுள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்றால் அவர்கள் அமித் மிஸ்ரா அல்லது பியூஷ் சாவ்லாவிடம் செல்ல வேண்டி இருக்கும்.

ஆனால் அது நடக்காது என நினைக்கிறேன். அவ்வாறு இலையெனில் அவர்கள் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளருக்கு செல்லலாம். அவர்கள் யாராக இருக்கும் என்றால், அடில் ரஷித், தப்ரைஸ் ஷம்சி, ஆடம் ஜாம்பா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும், நான் சிக்கந்தர் ராசவை அணிக்குள் எடுக்க பார்ப்பேன். ஏனெனில் அவர் சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்ல சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் கூட மேலும், அவரது சுழற்பந்து வீச்சை எளிதாக கணிக்க முடியாது. அவர் சமீப காலங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.