அப்பா வருகிறார், சீக்கிரம் படி… சிறுமியை அறிவுறுத்திய புத்திசாலி நாய்; வைரலாகும் வீடியோ

ஷாங்காய்,

பொதுவாக, மனிதனின் உற்ற தோழனாக, நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக நாய் இருந்து வருகிறது. மனிதர்களுடன் நட்புடன் பழகும் குணம் கொண்டதுடன், அவர்களது செல்ல பிராணியாகவும் பலரால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டு இருந்த ஒரு சிறுமியை செல்ல பிராணியான நாய் ஒன்று, சிறுமியின் அப்பா வருகையை அறிந்து, படிக்கும்படி அறிவுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

யோக் என்ற பெயரில், பாட்னர்ஸ் இன் கிரைம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், வீடு ஒன்றில் தொலைக்காட்சி ஓடி கொண்டிருக்கிறது. அதன் முன் சிறுமி கையில் ரிமோட்டுடன் அமர்ந்தபடி காணப்படுகிறார்.

கீழே தரையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று படுத்து கிடக்கிறது. திடீரென அது எழுந்து, வாசலை நோக்கி குரைக்கிறது. பின்னர் சிறுமி இருக்கும் பக்கம் மெல்ல திரும்பி, மேஜையின் மீது கை வைக்கிறது. படிக்க தொடங்கு என்பது போல் அறிவுறுத்துகிறது.

அந்த மேஜையில் சிறுமியின் வீட்டுப்பாடத்திற்கான, நோட்டு புத்தகங்கள் உள்ளன. அந்த நாய் அறிவுறுத்தியதும், அவசரமுடன் ரிமோட்டை வைத்து தொலைக்காட்சியை அணைத்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல் சிறுமி மேஜை முன் அமர்ந்து வேக வேகமுடன் எழுதும் வேலையை தொடங்கி விடுகிறார்.

சரியாக கதவை திறந்து கொண்டு சிறுமியின் அப்பா வீட்டுக்குள் நுழைகிறார். நேராக பக்கத்தில் உள்ள அறைக்கு செல்கிறார். அவரை நெருங்கியபடி வரவேற்க சென்ற நாய், அவர் அறைக்கு செல்லும் வரை பின்னாலேயே சென்று விட்டு, திரும்புகிறது.

சில வினாடிகள் ஓட கூடிய இந்த வீடியோ 11 லட்சம் முறை பார்வையிடப்பட்டு உள்ளது. 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலரும் நாயின் புத்திசாலித்தன செயலை பாராட்டி விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.