ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த வீரர் சிறந்த கேப்டனாக செயல்படுவார் – இர்பான் பதான் கருத்து

ஹைதராபாத்16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.

இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.

அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.

எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.