சீன விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம்..!!

டெல்லி : சீன விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், தி.மு.க, மார்க்சிஸ்ட், திரிணாமூல் உள்ளிட்ட 12 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீன படைகள் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக புகார் தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ளே இருக்கின்ற காந்தியடிகள் சிலையின் முன்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவராகவும் இருக்கின்ற டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சார்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள இந்திய, சீனா எல்லைப்பகுதியான தவாங்கில் சீன வீரர்கள் அத்துமீறி இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள் நுழைய முயற்சித்தார்கள். இதை வீரர்கள் தடுத்தபோது இருதரப்பினர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்சனைகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் முழுவதுமாக விவாதம் நடத்தப்படவேண்டும், இந்தியாவின் எல்லை பகுதி மிகவும் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை நீடித்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்ந்து நீடித்தால் இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளதாகவும், எனவே நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் முழுமையான விவாதம் நடத்தபடவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஒன்றிய அரசு இந்த எல்லை பிரச்சனைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதால், எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.