’செய்யும் தொழிலே தெய்வம்’ – துப்புறவு சீருடை அணிந்தவாறே உயிரைவிட்ட பெண்ணால் நெகிழ்ச்சி!

பெரம்பலூர் அருகே பெண் தூய்மைப்பணியாளர் ஒருவர் தன்னுடைய கடைசி ஆசையாக தூய்மை காவலர் சீருடையை அணிந்தவாறே உயிரிழக்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில், அவர் அவ்வாறே  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்துடன் நெகிழ்வையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர் பட்டு(53). சிறுவயதிலேயே கணவரை இழந்த பட்டு, தனது மூன்று குழந்தைகளையும் கூலிவேலை பார்த்து காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் அவர் 2017 ஆம் ஆண்டு வேப்பந்தட்டை ஊராட்சியில் தற்காலிக தூய்மைப்பணியாளராக சேர்ந்துள்ளார். பார்ப்பது தினக்கூலி வேலை என்றாலும் தனக்கு கிடைத்த துப்புறவுப் பணியை கண்ணும் கருத்துமாக பொறுப்புடன் செய்துவந்துள்ளார். வார்டு வார்டாக வண்டியை தள்ளிக்கொண்டே குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த பட்டு, தான் இறக்கும்போது தூய்மை காவலர் சீருடையை அணிந்தவாறே இறக்கவேண்டும் வேண்டும் என்று சக பணியாளர்களிடமும், உறவினர்களிடமும் அவ்வப்போது கூறிவந்துள்ளார்.
image
இந்த நிலையில் பட்டுவிற்கு நள்ளிரவில் மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது இறுதிகாலம் நெருங்கிவிட்டதை முன்கூட்டியே கணித்த பட்டு, தன்னுடைய தூய்மை காவலர் சீருடையை உறவினர்களிடம் கேட்டு வாங்கி அணிந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரின் உயிரும் பிரிந்துள்ளது. பட்டு அவரது  கடைசி ஆசையான தனது சீருடையை அணிந்தவாறே உயிரை விட்டது சக தூய்மை பணியாளர்களிடமும் உறவினர்களிடமும் பெரும் சோகத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்தியுள்ளது.
’செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை தூய்மைப்பணியாளர் பட்டு போன்றவர்களின் மூலம் காலம் நமக்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கிறது என்றே கூறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.