பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் கல்குவாரிகள் இயங்கலாம் – தடையை நீக்கிய தமிழக அரசு

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டா் தூரத்துக்கு கல்குவாரி செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் 3-ஆம் தேதியன்று தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டா் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், குவாரி அமைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், ஒரு கிலோமீட்டா் தொலைவுக்குள் இருந்த பல குவாரிகள் செயல்பட முடியாமல் இருந்தது அரசின் கவனத்துக்கு வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்ற சுரங்கத்துறை மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில், இது தொடா்பாக திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அரசுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் குவாரி, சுரங்கம் தோண்டும் உரிமம் பெற்றவா்கள் விருப்பம் கருதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டா் தூரத்துக்குள் குவாரி மற்றும் சுரங்கம் தோண்டுதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்வது தொடா்பான பரிந்துரையை அனுப்பும்படி நீா்வளத்துறை அமைச்சா் அறிவுறுத்தியிருந்தாா்.
image
இதன்படி, குவாரி, சுரங்கம் தோண்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, தமிழ்நாடு சிறு கனிமங்கள் தொடா்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையா் தமிழக அரசைக் கோரியிருந்தாா். இதனை கவனமாகப் பரிசீலித்த தமிழக அரசு பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையில் இருந்து ஒரு கி.மீ தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட அனுமதியில்லை. அதே நேரம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தால் அதன் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்குள் சுரங்கம் மற்றும் குவாரிகள் செயல்பட இருந்த தடை விலக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.