மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள விதிகளின்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அமைந்திருக்கிறதா? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் விளக்கமளித்து இருக்கிறார்.

அதில் அவர், தேசிய மருத்துவ ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, ஜூன் 2022 வரை, இந்தியாவில் ஆங்கில மருத்துவம் படித்து மாநில மருத்துவக் கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற டாக்டர்களின் எண்ணிக்கை 13,08,009 பேர். இவர்களில் 80 சதவிகிதத்தினர் இப்போதும் மருத்துவம் பார்க்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால், 5.65 லட்சம் இந்திய மருத்துவம் (ஆயுஷ்) பயின்ற டாக்டர்களையும் சேர்த்து, நம் நாட்டில் 834 பேருக்கு ஒரு டாக்டர் என்ற வீதத்தில் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அந்த வகையில் நாம் சற்று அதிக எண்ணிக்கையில் டாக்டர்களைப் பெற்றிருக்கிறோம்.

2014ல் 387 மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் இருந்தன. அது 67% அதிகரித்து 2022ல் 648 கல்லூரிகளாக உயர்ந்திருக்கிறது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களும் 2014ல் 51,348 என்று இருந்தது, தற்போது 87% உயர்ந்து 2022ல் 96,077 இடங்களாக அதிகரித்திருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களும் 2014 ல் 31185 ஆக இருந்தது, இப்போது 64,059 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் புதிதாக 21 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 38 அரசுக் கல்லூரிகளையும் சேர்த்து, மொத்தம் 10,825 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இந்தியாவில் மருத்துவக் கல்வி வசதியையும், மருத்துவத் துறையின் தரத்தையும் உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக தரம் உயர்த்தி புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி 157 கல்லூரிகள் தொடங்க உத்தரவிடப்பட்டு, அதில் 94 கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

தற்போது மாநில மத்திய அரசுகளுக்கு சொந்தமாக உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்தும் வகையில் அந்தக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உதவியுடன் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. இதுதவிர, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், புதிய கல்லூரிகளைத் தொடங்கும்போது தேவையான ஆசிரியர்கள், ஊழியர்கள், படுக்கை எண்ணிக்கை, உள்கட்டமைப்பு போன்ற விஷயங்கள் தொடர்பான விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல மருத்துவக் கல்லூரி டீன், பேராசிரியர்கள், முதல்வர், மருத்துவ இயக்குனர் போன்ற பதவிகளுக்கான உச்சபட்ச வயது 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தளர்வுகள் மூலம் சற்று எளிதாக புதிய மருத்துவக் கலூரிகளைத் தொடங்க முடியும்.

இவ்வாறு அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.