கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு குளிர்கால கூட்டத் தொடர் முன்னதாக முடிவடைந்தது: சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க கடைசி நாளிலும் மறுப்பு  

புதுடெல்லி: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 6 நாட்கள் முன்னதாக நேற்றுடன் நிறைவடைந்தது. சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை இரு அவையிலும் கடைசி நாளிலும் நிராகரிக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கூட்டத் தொடரை முன்கூட்டி முடிக்க இரு அவைகளின் எம்பிக்களும் வலியுறுத்தி இருந்தனர். இதன் அடிப்படையில், நேற்றுடன் கூட்டத்தொடரை முன்கூட்டி முடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று நடந்தது. கடைசி நாளிலும் அருணாச்சலில் இந்தியா, சீனா வீரர்கள் மோதிக் கொண்டவிவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். அவர்களின் இந்த கோரிக்கையை அவைத்தலைவர்கள் கடைசி நாளிலும் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று இரு அவைகளும் 6 நாட்கள் முன்பாக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நேற்றைய கடைசி நாள் அமர்வில் இரு அவைகளிலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* நிறைவேறிய மசோதாக்கள்
குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா, அரசியலமைப்பு (பட்டியலின மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் திருத்தம் தொடர்பான 3 மசோதாக்கள், டெல்லி சர்வதேச நடுவர் மன்றம் திருத்த மசோதா மற்றும் கடல் கொள்கை தடுப்பு திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவையில் அரசியலமைப்பு (பழங்குடியினர்) ஆணைகள் திருத்தம் தொடர்பான 4 மசோதாக்கள் மற்றும் கடல் கொள்ளை தடுப்பு உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னதாக, இக்கூட்ட தொடரில் 16 புதிய மசோதாக்கள் உட்பட 25 மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* மாநிலங்களவை 102% செயல்பாடு
கூட்டத் தொடரை நிறைவு செய்வதற்கு முன்பாக மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா, ‘’மொத்தம் 13 அமர்வுகளில் அவையின் உற்பத்தி திறன் 97 சதவீதம். இதில், துணை மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டது உட்பட 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை மொத்தம் 62 மணி நேரம் 42 நிமிடங்கள் செயல்பட்டுள்ளது’’ என்றார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறுகையில், ‘’13 அமர்வுகளில் அவையின் உற்பத்தி திறன் 102 சதவீதம். மொத்தம் 64 மணி நேரம் 50 நிமிடங்கள் அவை செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளியால் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் வீணாகின’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.