LPL இறுதிப் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் ,ஜப்னா கிங்ஸ் அணிகள்

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையே இன்று (23) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் ‘கொலிபையர் – 2’ போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (22) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கண்டி பல்கொன்ஸ் அணி, தலைவர் வனிந்து ஹஸரங்க தனது அதிரடி மூலம் 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது.

கண்டி பெல்கன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் வனிந்து ஹசரங்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததோடு 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் உடன் 77 ஓட்டங்கள் பெற்றார்.

இதன்பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பூர்த்தி செய்த சரித் அசலன்க 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் எடுத்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் கசுன் ராஜித தெரிவாகினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.