முஸ்லிம் மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை குறைப்பு – அம்பலமான உண்மை!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், “சிறுபான்மையினருக்கான ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக; 2013 முதல் 2021 வரை, ஆண்டு/மதம் வாரியாக, ப்ரி மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களைத் தருக; மற்றும் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதற்கான காரணங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள எழுத்துபூர்வமான பதில் அளித்துள்ளார். அதில், “திட்டங்களை மறுசீரமைப்பு செய்வது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். ஸ்காலர்ஷிப் திட்டங்களின் கீழ் வருமான அளவுகோல்களைத் திருத்துவது உட்பட பல்வேறு அம்சங்களை அவ்வப்போது அமைச்சகம் சீராய்வு செய்கிறது. 2013-14 முதல் 2021-22 வரை ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையின் ஆண்டு வாரியான மற்றும் மத வாரியான விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன. ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை நிறுத்தும் யோசனை அரசுக்கு இல்லை.” என கூறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொடுத்திருக்கும் புள்ளி விவரத்தின் படி பாஜக ஆட்சிக்கு வந்த 2013 -14 ஆம் ஆண்டில் 63 லட்சம் முஸ்லிம் மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் அது 58.69 லட்சமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டில் 39.47 லட்சமாக அது குறைக்கப்பட்டிருக்கிறது. 2016 -17 இல் 30.72 லட்சம் ஆக மிக மோசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை குறைப்பு

அதேபோல், 2017 – 18 இல் 40.6 8 லட்சம் மாணவர்களும் 2018 -19 இல் 44.18 லட்சம் மாணவர்களும்; 2019 -20இல் 41.56 லட்சம் மாணவர்களும் இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற்றுள்ளனர். இந்த ஸ்காலர்ஷிப் 2020-21 இல் 39.13 லட்சமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 42.31 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., கூறுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 8 ஆண்டுகளில் ப்ரி மெட் ரிக் ஸ்காலர்ஷிப் வாங்கும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் குறைக்கப்பட்டிருக்கிறது. பௌத்த மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2013-14 இல் 2.62 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட இந்த ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் 2021 – 22இல் 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மாணவர்கள் 8.29 லட்சம் பேர் 2013 -16இல் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளனர். ஆனால் 2021 – 22 இல் 7.27 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற்று இருக்கின்றனர். சீக்கிய மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும்தான் சற்றே அது உயர்ந்திருக்கிறது 2013- 14 இல் 3.98 லட்சம் பேர் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளனர். 2021 – 22 இல் அது 5.07 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஜைன மதத்தைச் சார்ந்த மாணவர்கள் 2021-22 இல் 56691 பேர் மட்டுமே இந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.” என சுட்டுக்காட்டியுள்ளார்.

மேலும், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பாஜக அரசு சாகடித்து வருகிறது. குறிப்பாக முஸ்லிம் மாணவர்களின் படிப்பில் இந்த அரசு கை வைத்திருக்கிறது. அதைத்தான் இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என ரவிக்குமார் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.