''கரோனா பரவலைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருப்போம்'' – மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: கரோனா தொற்று பரவால் இருக்க நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இந்த ஆண்டுக்கான கடைசி மனதின் குரல் வானொலி உரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: “2022ம் ஆண்டு பல விதங்களில் சிறப்பான ஆண்டாக இருந்தது. நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். இதையடுத்து, அமிர்த காலம் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டில்தான் நாம் உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம்.

இன்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினம். வெளியுறவு கொள்கை, உள்கட்டமைப்பு என ஒவ்வொரு துறையிலும் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் அவர். அவரது தலைமைப் பண்பும், தொலைநோக்குப் பார்வையும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது.

மும்பையில் உள்ள டாடா நினைவு மையம் நடத்திய ஆய்வு ஒன்றில், மார்பக புற்றுநோய்க்கு யோகா சிறந்த தீர்வாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் யோகா செய்வதன் மூலம் அதன் பாதிப்பு 15 சதவீதம் குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சுகாதாரத்துறையில் கடந்த சில ஆண்டுகளில் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். பெரியம்மை மற்றும் போலியோ நோய்களை நாம் நமது நாட்டில் இருந்து ஒழித்துவிட்டோம். காலா அசார் என அழைக்கப்படும் கருங் காய்ச்சல் நோயும் ஒழிய இருக்கிறது. இந்த நோய் பிகார் மற்றும் ஜார்க்கண்ட்டின் 4 மாவட்டங்களில் மட்டுமே தற்போது இருக்கிறது.

கரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்து வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தற்போது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் இருந்து கரோனா தொற்று பரவாமல் நாம் தடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.