டெல்லியில் ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்ற பிரபலங்களிடம் உளவுத்துறை விசாரணை: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு; ராகுல் கருத்துக்கு நிபுணர் பதிலடி

புதுடெல்லி: டெல்லியில் ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்ற பிரபலங்களிடம் உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். ராணுவம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு நிபுணர் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் நடந்த ராகுல்காந்தியின் நடைபயணத்தில் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்துறை நிபுணர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று ஆதரவளித்தனர். அவர்களின் பின்புலம் மற்றும் அவர்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து உளவுத்துறை விசாரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘டெல்லியில் நடந்த ராகுலின் நடைபயணத்தின் போது அவரிடம் உரையாடியவர்களை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது. ெதாடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறது. நடைபயணத்தில் பங்கேற்க அழைக்கப்பட்ட அழைப்பாணை விபரங்களை கேட்டுள்ளனர். ராகுலின் நடைபயணத்தால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதற்றம் அடைந்துள்ளனர்’ என்று கூறினார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்க தயாராகி வருகிறது’ என்று கூறினார்.

இவரது இந்த கருத்து தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு நிபுணர் பிரபுல் பக்ஷி கூறுகையில், ‘சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியது ஒன்றும் புதிதல்ல; அந்த இரு நாடுகளின் தாக்குதலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது. ராகுல் காந்தி கூறியதில் புதியதாக என்ன இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.