'கிரிக்கெட் பாக்க மாட்டேன்; அவர் யாருன்னே தெரியல!' – ரிஷப் பந்த்தை காப்பாற்றியவர் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலத்தில், சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை காப்பாற்றிய நபர்களில் ஒருவர், “விபத்தில் சிக்கியது ரிஷப் பந்த் என்றே தனக்கு தெரியாது,” என தெரிவித்து உள்ளார்.

25 வயதாகும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், இன்று அதிகாலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றார். டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பந்த், கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப் பந்த் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார்.

தற்போது ரிஷப் பந்த்துக்கு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைய முன்னாள், இந்நாள் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை காப்பாற்றிய நபர்களில் ஒருவரான பேருந்து ஓட்டுனர் சுஷில் மான் பேட்டி அளித்துள்ளார். ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:

எதிர் திசையில் இருந்து சொகுசு கார் அதி வேகமாக வந்து சாலைத் தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதைப் பார்த்த உடனே, நான் பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, சாலைத் தடுப்பை நோக்கிச் சென்றேன். அப்போது கார் கண்ணாடி பாதி திறந்த நிலையில் இருந்தது.

அவர் (ரிஷப் பந்த்) என்னிடம் நான் ஒரு கிரிக்கெட் வீரர். எனது அம்மாவை தொலைபேசியில் அழையுங்கள் என தெரிவித்தார். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் கிரிக்கெட் பார்க்க மாட்டேன். இது ரிஷப் பந்த் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் பேருந்தில் இருந்த மற்றவர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். ரிஷப் பந்த்தை மீட்ட பிறகு, வேறு யாராவது காரில் இருக்கிறார்களா என்று பார்த்தேன். பிறகு, காரில் இருந்த நீல நிறப் பையையும், பணத்தையும் ஆம்புலன்சில் ரிஷப் பந்த்திடம் கொடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.