பீலே ஒரு துருவ நட்சத்திரம் – வைகோ இரங்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ கால்பந்து விளையாட்டின் மன்னாதி மன்னனாக உதைபந்து திருவிழாவின் திருமகனாக ஈடு இணையற்ற விளையாட்டு வீரர் உதைபந்து பேரரசர் பிரேசிலைச் சேர்ந்த பீலே உடல்நலம் இன்றி மறைந்தார் என்ற செய்தி உலகெங்கும் உள்ள என் போன்ற உதைபந்து ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. 

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, சின்னஞ் சிறுவனாகவே கால்பந்து விளையாட ஆரம்பித்து, உலகக் கால்பந்துப் போட்டியில் மூன்று முறை பிரேசிலுக்கு சேம்பியன் தகுதி பெற்றுக் கொடுத்த பீலே இறுதி நாட்களில் உடல்நலமின்றி துன்பப்பட்டார் என்ற செய்தி மனதை வருத்துகிறது. ஆனால் உதைபந்து விளையாட்டு உலகில் இருக்கும்வரை பீலேயின் பெயரும் புகழும் துருவ நட்சத்திரம்போல் பிரகாசிக்கும். பீலே குடும்பத்தினருக்கும், கல்பந்து ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பீலே, புற்றுநோயால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 29) உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தினரும், ஏஜென்டும் உறுதிப்படுத்தினர். 

பின்னர், பீலேவின் மகளான கெலி நாசிமெண்டோ தனது இன்ஸ்டாகிராமில், படுக்கையில் படுத்திருக்கும் பீலேவின் கையை பிடித்தபடி நிற்கும் குடும்பத்தினரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். “நாங்கள் என்னவாக இருக்கிறோமோ அனைத்திற்கும் உங்களுக்கு நன்றி. உங்களை அளவில்லாமல் நேசித்தோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்

எட்சன் அரான்டெஸ் நாசிமெண்டோ என்ற இயற்பெயர் கொண்ட பீலேவுக்கு வயது 82. செப்டம்பர் 2021ஆம் தேதி, அவரின் பெருங்குடலில் இருந்து புற்றுநோய் கட்டி  ஒன்று அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. 

அந்த வகையில், கடந்த நவம்பர் 29ஆம் தேதி அவர், பிரேசிலின் ஸா பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் புற்றுநோய் உள்பட பல நோய் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரின் பெருங்குடலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டி தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாகவும், அவரின் சிறுநீரகம் மற்றும் இதயம் செயலிழப்பு சிகிச்சை இன்னும் கூடுதல் சிகிச்சை தேவை எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.  

கால்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக திகழ்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த பீலே, 1958, 1962, 1970 ஆகிய தொடர்புகளிலும் பிரேசில் அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பீலே மொத்தம் 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்தது மட்டுமின்றி, தற்போது வரை பிரேசிலின் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பீலே தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.