பீலே செஞ்ச அசாத்தியம்… நைஜீரியாவில் நடந்த அதிசயம்… கால்பந்தின் மறக்க முடியாத சுவடுகள்!

பீலே… உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். பிரேசில் நாட்டின் தேசிய சொத்து. தனது தாய்நாட்டிற்காக மூன்று முறை உலகக்கோப்பைகளை வென்று கொடுத்தவர். சான்டோஸ் (Santos FC) கிளப்பிற்காக கோல் மழை பொழிந்தவர். உலகக்கோப்பை தொடரில் மிக இள வயதில் (17 ஆண்டுகள் 239 நாட்கள்) கோல் அடித்தவர். இப்படி சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் தனது 82வது வயதில் புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் காலமானார். இது உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரிய உள்நாட்டு போர்

இவரது சாதனைகளில் மிகவும் முக்கியமானதாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று நைஜீரிய உள்நாட்டு போர் நிறுத்தம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு. இனி வரலாற்றை திரும்பி பார்ப்போம். 1960களில் பீலே புகழ் பெற்ற வீரராக வலம் வரத் தொடங்கினார். இவர் மூலமாக பிரேசில் நாட்டின் Santos FC கால்பந்து கிளப்பும் உலக அளவில் பிரபல அடையத் தொடங்கியது. குறிப்பாக தென் அமெரிக்க கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக திகழ்ந்தது.

சாதனைகள் படைத்த சான்டோஸ்

அந்த காலகட்டத்தில் 5 முறை பிரேசிலியன் சாம்பியன்ஷிப், 2 முறை கோபா லிபர்டாடோரஸ், 2 முறை ஐரோப்பிய கால்பந்து அணிகள் உடனான இன்டர்கான்டினன்டல் கோப்பைகளை வென்று தந்திருந்தது. இந்த சூழலில் பீலே மற்றும் அவரது Santos FC அணியை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி கால்பந்து ஆட வைத்து சர்வதேச அளவில் கவனம் ஈர்க்க பிரேசில் திட்டமிட்டது. அதன்படி 1966ல் அமெரிக்கா, 1967ல் ஆப்பிரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, 1968ல் அர்ஜென்டினா என சுற்றுப்பயணம் செய்தனர்.

எர்லிங் ஹாலண்ட்: கோல் சூறாவளி கிளம்பியது… தரமா வச்சு செஞ்ச Man City… வெளியே ஓடிய Liverpool!

பல லட்சம் பேர் பலி

இந்நிலையில் 1969ல் நைஜீரிய நாட்டிற்கு சென்றது பீலேவின் Santos FC. அப்போது அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருந்தது. ஹௌசா-ஃபுலானி சமூக மக்கள் வடக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் தெற்கில் இருந்த இக்போ மக்கள் அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து அந்நாட்டு அரசில் இருந்து பிரிந்து ”பயாஃப்ரா” என்ற பெயரில் தனி நாடாக செயல்படத் தொடங்கினர். ஆனால் நைஜீரியா விடவில்லை. போரை ஆரம்பித்து மீண்டும் தங்கள் வசம் கொண்டு வர முடிவு செய்தது. போர் ஆரம்பித்தது. தொடர் மோதல்களில் பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

48 நேர போர் நிறுத்தம்

45 லட்சம் பேர் இடம்பெயர நேரிட்டது. பசி பட்டினியால் மக்கள் வாடினர். இத்தகைய சூழலில் தான் Santos FC அணி நைஜீரியா வந்திறங்கியது. இவர்கள் நைஜீரிய தேசிய அணியுடன் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த போட்டிக்காக நைஜீரியா – பயாஃப்ரா இடையிலான உள்நாட்டு போர் 48 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த போட்டியில் 2-2 என டிரா ஆனதாக சொல்லப்படுகிறது. அந்த இரண்டு கோல்களையும் பீலே தான் அடித்திருந்தார். போட்டி முடிந்ததும் பீலேவிற்காக நைஜீரிய மக்கள் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தோனி மகளுக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குறிப்பாக Santos FC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, போட்டி நடைபெற்ற நாளில் நைஜீரிய ராணுவ தளபதி சாமுவேல் ஓக்பெமுடியா உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். பெனின் மற்றும் பயாஃப்ரா இடையிலான பாலத்தை திறக்க உத்தரவிட்டார். இதன்மூலம் பீலேவின் ஆட்டத்தை பார்க்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

பீலே அடித்த கோல்

சுமார் 25 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் 2-1 என்ற கோல்கணக்கில் Santos FC வெற்றி பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நினைவு கூறும் பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர்கள், எங்கள் மீதான மதிப்பு மரியாதை காரணமாக உள்நாட்டு போரையே நைஜீரியா நிறுத்தியதாக பெருமையுடன் கூறுகின்றனர். 2005ல் டைம் இதழில் வெளியான கட்டுரையில், 1969ஆம் ஆண்டு நைஜீரியாவில் பீலே கால்பந்து விளையாட சென்ற போது உள்நாட்டு போர் மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

இப்படி மாறுபட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை. பீலேவிற்காக, Santos FC அணியின் கால்பந்து போட்டிக்காக உள்நாட்டு போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது யாருக்கும் கிடைத்த மகத்தான விஷயம் என கால்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.