Malikappuram: "கேரள சினிமாவின் `காந்தாரா' இது!"- படம் பார்த்து நெகிழ்ந்த அரசியல்வாதிகள்

விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ள மலையாள சினிமா `மாளிகப்புறம்’ (Malikappuram). நேற்று முன்தினம் (டிச.30) வெளியான `மாளிகப்புறம்’ ஐயப்பப் பக்தர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது.

8 வயது சிறுமி கல்யாணி தனது பாட்டி சொல்லும் கதை மூலம் சபரிமலை பற்றிக் கேள்விப்படுகிறார். சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற தீராத ஆசை உண்டாகிறது. அதற்காக அவர் தனது நண்பனான மற்றொரு சிறுவனுடன் புறப்பட்டுச் செல்லும்போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு ‘மாளிகப்புறம்’ படத்தின் கதை நகருகிறது. இப்படத்தைப் பார்த்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ‘கேரளத்தின் காந்தாரா இது’ எனப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மாளிகப்புறம் சினிமா காட்சி

பா.ஜ.க கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் மாளிகப்புறம் சினிமா குறித்துக் கூறுகையில், “‘மாளிகப்புறம்’ சினிமா பார்த்தேன். சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு வந்த உணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களின் கண்களையும் குளமாக்கும், கைதட்ட வைக்கும், சரணம் என உற்சாகமாகச் சொல்ல வைக்கும் மகத்தான படம் இந்த ‘மாளிகப்புறம்’. சபரிமலை சென்றவர்கள் எங்காவது ஓரிடத்தில் தெய்வீக அனுபவத்தை உணருகின்றனர். அதை ‘மாளிகப்புறம்’ சினிமாவில் பார்க்க முடிகிறது.

‘பக்தரின் கூடவே ஈஸ்வரன் மனித வடிவில் வருவார்’ என்ற வசனம்தான் இந்த சினிமாவின் ஹைலைட். பாட்டி குழந்தைக்கு ஐயப்ப சுவாமியைக் குறித்துக் கூறுவதும், அதன் மூலம் 8 வயது சிறுமிக்குச் சபரிமலைக்குச் செல்ல வேண்டும் என்ற தீவிர எண்ணம் ஏற்படுவதும், அதற்காகச் சிறுமி ரிஸ்க் எடுப்பதையும் நுணுக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன்

இரண்டாம் பகுதியில் உன்னி முகுந்தன் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காந்தாரா சினிமாவில் க்ளைமாக்ஸ் காட்சியைப் போன்று ‘மாளிகப்புறம்’ சினிமாவில் உன்னி முகுந்தனின் சண்டைக் காட்சிகள் பிரமாதம். குழந்தைகளின் நடிப்பு இதயத்தைக் கவர்ந்திழுக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் இந்த சினிமாவை தங்கள் நெஞ்சோடு சேர்த்துவைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பத்தனம்திட்டா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்றோ ஆன்றணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “சபரிமலையை உள்ளடக்கிய பகுதியின் மக்கள் பிரதிநிதி என நான் கூறும்போது கிடைக்கும் பக்தி பூர்வமான வரவேற்பை உணர்வுபூர்வமாக அனுபவித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாகக் கேரளத்துக்கு வெளியே நான் செல்லும் போது இந்த அனுபவம் அதிகமாகவே கிடைத்திருக்கிறது. அவர்களுக்கெல்லாம் வார்த்தையால் விவரிக்கமுடியாத சக்தியின் ஆதாரமாக ஐயப்பன் உள்ளார்.

மாளிகப்புறம் சினிமா காட்சி

மாளிகப்புறம் சினிமா குறித்து ஒற்றை வாசகத்தில் வர்ணிப்பதாக இருந்தால் ‘கேரளத்தின் காந்தாரம்’ எனக் கூறலாம். கல்யாணி என்ற எட்டு வயது சிறுமியும், அவளது நண்பனான பியூசும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்போது பார்வையாளர்களுக்கும் சபரிமலை பயணம் செய்யும் அதே அனுபவம் ஏற்படுகிறது.

தத்வமஸி என சபரிமலையில் பொறிக்கப்பட்டுள்ள ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்ற பொருளைத்தான் ‘மாளிகப்புறம்’ படம் நம்மிடம் கூறுகிறது. இதில் நடித்துள்ள தேவநந்தா, ஸ்ரீபத் ஆகிய குழந்தைகளுக்குக் கடவுளின் அருள் இருக்கிறது என நம்புகிறேன். அதனால்தான் படத்தைப் பார்த்தபோது ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற மந்திரம் மனதில் நிறைகிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்கள் உள்ளத்தில் ஒரு துளி கண்ணீரும், திருப்தியும் மிச்சமிருக்கும்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ஆன்றோ ஆன்றணி

வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களால் `மாளிகப்புறம்’ படத்தின் நாயகன் உன்னி முகுந்தன் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.