தமிழர் திருநாளில் எஸ்பிஐ வங்கித் தேர்வு: தேதியை மாற்ற சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை!

பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று நடைபெறவுள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,486 பணியிடங்களுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 15ஆம் தேதியன்று முதன்மை தேர்வு நடைபெறவுள்ளது.

ஆனால், பொங்கல் பண்டிகையன்று தேர்வு வைத்துள்ளது தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் அனைவரும் இருப்பதால் தேர்வு எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படக்கூடும் எனவும், பொங்கல் பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருப்பதாலும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மை தேர்வை நடத்த தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பொங்கல் திருநாளன்று வைக்கப்படும் எஸ்பிஐ தேர்வுத் தேதியை மாற்ற வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர் திருநாளில் தேர்வு… பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15 பொங்கல் தமிழர் திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வுத் தேதி மாற்றப்பட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.