வாயை திறந்தால் ரகசியத்தை உளறிடுவேன்… பிரசாந்த் கிஷோர் பேச்சால் பிகாரில் பரபரப்பு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டு பிரபலமான தேர்தல் வியூக நிபுணர் என்ற அடையாளத்தை பெற்றவர் பிரசாந்த் கிஷோர். இவர் அடுத்தகட்டமாக பிகாரில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த மும்முரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் கையிலெடுத்துள்ள விஷயம் பாத யாத்திரை. இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸின் எழுச்சிகாக நாடு தழுவிய அளவில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்தை போல், பிகாரில் அரசியல் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார் பிரசாந்த் கிஷோர்.

பிகாரில் அரசியல் பயணம்

இதற்கு ”ஜன் சூரஜ் அபியான்” என்று பெயரிட்டுள்ளார். மாநிலம் தழுவிய அளவில் 3,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். இடையில் செய்தியாளர்களை சந்திக்கும் போது, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்காக அவர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர் கையில் பணம்

இந்நிலையில் கிழக்கு சம்பரான் மாவட்டம் கல்யாண்பூரில் சமீபத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், எனக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைக்கிறது என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்? நாங்கள் வைத்திருந்த அமைப்பின் மூலம் பணம் கிடைத்தது. பல்வேறு மாநிலங்களில் தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட்டுள்ளோம். மொத்தம் 6 மாநிலங்களில் அரசியல் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உழைத்திருக்கிறோம்.

எங்கிருந்து வந்தது?

அதன்மூலம் திரட்டிய பணம் தான் என்னிடம் உள்ளன. இந்த பணத்தை பிகார் மாநிலத்திற்காக பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் ஏழையாக இருக்கலாம். அதேசமயம் நேர்மையாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினால் நான் உதவி செய்கிறேன். தாராளமான என்னிடம் வாருங்கள் எனக் கூறியுள்ளார். மேலும் பேசுகையில், ஆளும் கூட்டணி அரசை பார்த்து கேட்கிறேன்.

தேஜஸ்வி யாதவிற்கு கேள்வி

அவர்கள் விமானங்களில் பிறந்த நாள் கொண்டாடும் வகையில் பணத்தை வாரி இறைக்கிறார்களே? அதற்கு எங்கிருந்து பணம் வந்தது? தேஜஸ்வி யாதவ் எந்தப் பணத்தை கொண்டு கட்சியை நடத்துகிறார்? இந்த இடத்தில் நான் மட்டும் வாயை திறந்தால் எல்லா ரகசியங்களும் வெளிவந்து விடும். நான் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக அரசியல் பணி ஆற்றியிருக்கிறேன்.

ரகசியத்தை சொல்லவா?

அவர்களின் ரகசியங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். நான் உண்மையை சொன்னால் அவர்களின் வேஷ்டி, துண்டு கூட மிஞ்சாது எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த விஷயம் ஆளும் தரப்பை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி தேஜஸ்வி யாதவை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க 2025ஆம் ஆண்டு வரை நிதிஷ் குமார் காத்திருக்க வேண்டாம். உடனே செய்து விடுங்களேன்.

தேஜஸ்வியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்ததன் மூலம், தன்னால் நேரடியாக வெற்றி பெற முடியாது என நிதிஷ் குமார் ஒப்புக் கொண்டிருப்பதாக பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.