வாரிசு ஆன்லைன் டிக்கெட்டை வாட்ஸ் அப்பில் வைத்த விஜய் ரசிகர் – கடைசியில் நடந்த சோகம்

திருத்தணியில் ‘வாரிசு’ படம் பார்க்க ஆன்லைனில் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருந்த நிலையில், அதில் இருந்த க்யூ ஆர் கோடை பயன்படுத்தி மர்மநபர் 3 டிக்கெட் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள துர்கா மற்றும் துர்கா மினி திரையரங்கில் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படம் நாளை ரீலீஸ் ஆகிறது. இதனால் ரசிகர்கள் நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் நாளை (11.01.23) மாலை 6.30 மணி காட்சிக்காக தான் வாங்கிய 3 நபர்களுக்கான ‘வாரிசு’ பட டிக்கெட்டை தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-ல் வைத்துள்ளார்.

image

இந்நிலையில் ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட்டை பெறுவதற்காக அந்த ரசிகர் தியேட்டருக்கு சென்றுப் பார்த்த போது, இந்த டிக்கெட்டை வேறு யாரோ வாங்கி விட்டதாக தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரசிகர் விசாரித்த போது, அந்த ஆன்லைனில் வாங்கிய டிக்கெட்டில் இருந்த க்யூ ஆர் கோடை நூதன முறையில் பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தி 3 டிக்கெட் வாங்கியது தெரியவந்தது. ஆனால் டிக்கெட் வாங்கியது யார் என்ற விவரம் தெரியவில்லை. நாளை மாலை 6.30 மணிக்கு சினிமா ஆரம்பிக்கும் போது தான் தெரியவரும் என திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நூதன வகையில் புதுமோசடியில் ஈடுபட்டவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என விஜய் ரசிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, உசிலம்பட்டியில் வெளியாகும் அஜித், விஜய் படங்களுக்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 42 ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பொன்னுச்சாமி, மலையாண்டி என இரு திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் ‘துணிவு’, விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்திற்கான டிக்கெட், அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட அதிகப்படியாக ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி, தேனி ரோட்டில் உள்ள பொன்னுச்சாமி தியேட்டர் முன்பு மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் ரசிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ரசிகர்களான உசிலம்பட்டி நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் சந்திரன் மற்றும் வழக்கறிஞர் சங்கிலி உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.