முகூர்த்தக்கால் நடப்பட்டது நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடக்க உள்ள நிலையில், ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. காலை 8 மணியளவில் துவங்கும் போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் இந்திராணி  பொன்வசந்த், மதுரை வருவாய் கோட்டாட்சியர் பிர்தெளஸ் பாத்திமா, தாசில்தார்  முத்துப்பாண்டி, மண்டலத் தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் முகமது கலாம்  முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராமத்தின் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட 16 நபர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழுவில், 10வது நபராக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேர்க்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சமாதான கூட்டம் முடிந்து இரு தரப்பினரும் வெளியே வந்தனர். அப்போது அவனியாபுரத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், இரண்டு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தொடர்ந்து நாளை மறுதினம் (ஜன. 16) பாலமேடு, மறுநாள் (ஜன. 17ல்) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.