காங்கிரஸ் எம்.பி. உயிரிழப்பு: பாரத் ஜோடோ யாத்ரா நிறுத்தி வைப்பு!

பஞ்சாபில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர்
காங்கிரஸ்
எம்.பி. சந்தோக் சிங் செளத்ரி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக பாரத் ஜோடோ யாத்ரா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, கடந்த மாதம் 24ஆம் தேதி டெல்லி சென்றது.

இதையடுத்து, குளிர்காலத்தையொட்டி 9 நாட்கள் நடைபயணத்துக்கு விடுப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது யாத்திரை உத்தரப்பிரதேச மாநிலம் சென்றது. அங்கிருந்து மீண்டும் ஹரியாணா வழியாக பஞ்சாப் சென்றுள்ளது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பஞ்சாபின் ஃபதேகர் பகுதியில் உள்ள சிர்ஹிந்த் பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை தொடங்கியது. லூதியானா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் செளத்ரி பங்கேற்றார். யாத்திரை ஃபில்லூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சந்தோக் சிங் செளத்ரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பக்வாராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சந்தோக் சிங் செளத்ரி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திடீர் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்தோக் சிங் செளத்ரி திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் அணுகுவதற்கு எளிமையான தலைவர். இளைஞர் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வரை பொது சேவைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சந்தோக் சிங் செளத்ரி, காங்கிரஸ் குடும்பத்தின் வலுவான தூணாக இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தும் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

முன்னதாக, தனது யாத்திரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு சந்தோக் சிங் செளத்ரி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே, ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறுத்தி வைக்கப்படுவதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், சந்தோக் சிங் செளத்ரியின் இறுதி சடங்கு நாளை காலை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.