ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை..!!

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாவலரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு காபூலில் மீண்டும் தங்க முடிவு செய்த சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முர்சால் நபிஜாதாவும் ஒருவர்.

நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியிருப்பதாக காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

முன்னதாக 2019 இல் காபூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தலிபான் கையகப்படுத்தும் வரை எம்.பி.யாக இருந்த நபிசாதா, மனித வள மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கல்வி பெறுவதையும், விளையாட்டு விளையாடுவதையும், ஆண் துணையின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதையும், அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வதையும் தடை செய்யும் கொள்கைகள் மீது தலிபான் அரசாங்கம் நாட்டின் பெண்களிடமிருந்து தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்துவரும் நேரத்தில் அவரது கொலை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.