இந்தியா மீது போர் தொடுத்து பாடம் கற்றுக்கொண்டோம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புலம்பல்| Lesson learned from waging war on India: Pakistan PM Shefaz Sharif laments

அபுதாபி: ”இந்தியா மீது மூன்று முறை போர் தொடுத்து, நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம். இந்த போர்கள் எங்கள் மக்களுக்கு வறுமை, துன்பத்தை கொண்டு வந்து சேர்த்து விட்டன. எனவே இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம்,” என, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயை மையமாக வைத்து செயல்படும், ‘அல் அரேபியா’ என்ற ‘டிவி’ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகள். சுமுகமாகத் தான் வாழ்ந்தாக வேண்டும். இரு நாடுகளிலும் ஏராளமான டாக்டர்கள், இன்ஜினியர்கள் உள்ளனர். இருக்கும் வளங்களை வைத்து சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும். இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படும். இதுபோன்ற போர்களால் நேரமும், பணமும் தான் விரயமாகும். இந்தியா மீது நாங்கள் மூன்று முறை போர் தொடுத்துள்ளோம். இந்த போர்களால், எங்கள் நாட்டின் மக்கள் வறுமை, துன்பத்துக்கு தள்ளப்பட்டது தான் மிச்சம். வேலையின்மையும் அதிகரித்து விட்டது. இந்தியா மீது
போர் தொடுத்து நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம்.

எனவே இந்தியாவுடன் ஆழமான அர்த்தமுள்ள நேர்மையான பேச்சு நடத்தி காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுக தீர்வு காண தயாராக உள்ளோம். இரு தரப்பு பேச்சுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும். இந்தியாவுடன் அமைதியை பின்பற்ற விரும்புகிறோம். அதேநேரத்தில் காஷ்மீரில் தற்போது நடக்கும் நிகழ்வுகளை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டத்தை இந்திய அரசு ரத்து செய்தது; இந்த உத்தரவை திரும்ப பெற்றால் தான் இந்தியாவுடன் பேச்சு நடத்த முடியும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.