ஈரோடு இடைத்தேர்தல்: பல்டி அடித்த பாமக..ஷாக்கில் எடப்பாடி பழனிச்சாமி டீம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இப்போதும் அந்த கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிட விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக போட்டியிடும் என்ற முடிவை தாங்கள் ஏற்பதாகவும், கூட்டணி தர்மத்தை மதித்து தாங்கள் முழு ஆதரவையும் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக களமிறங்குவது உறுதியாகிவிட்டது. இதனையொட்டி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தங்களுடன் இணைந்திருந்த கூட்டணிக் கட்சியினரை சந்தித்து இடைத்தேர்தலுக்காக நேரில் ஆதரவு திரட்டி வருகின்றனர். 

பாமகவும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அதிமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என அக்கட்சி வெளிப்படையாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, அதிமுக கூட்டணியில் பாமக இல்லை எனும் நிலையே தற்போது வரை தொடர்வதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் பாமக-வின் நிலைப்பாடு குறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பாமக உயர் நிலை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் முடிவெடுத்துள்ளோம். பாமகவை பொறுத்தவரை இடை தேர்தல் தேவையற்றது. நேர விரையம்.

சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் அந்த கட்சி விரும்பும் நபரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு. 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு தற்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக  சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மூன்று மாதத்திற்கு முன்பு தான் யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுப்போம்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.