குப்பையில் கழிவுப்பொருட்கள் வெடிப்பு காயமடைந்த சிறுவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குப்பையில் கழிவுப்பொருட்கள் வெடித்ததால் காயமடைந்த சிறுவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், கடந்த 8.7.2018ல் கருத்தூரணி கண்மாய் பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த குப்பையில் கொட்டியிருந்த அபாயகரமான கழிவுப்பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இழப்பீடு கோரியும், அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் குப்பையில் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சிறுவர்களின் பெற்றோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி தான் முதலில் எழுகிறது. அருகில் இருந்த பட்டாசு ஆலையினர் இதற்கு பொறுப்பேற்க முடியாது. விபத்து என்பதால், மேல் நடவடிக்கை தேவையில்லை என்ற போலீசாரின் இறுதி அறிக்கையை மாஜிஸ்திரேட் ஏற்றிருக்கக் கூடாது. இதுபோன்ற நேரத்தில் பொது சுகாதாரம் மற்றும் பொது பாதுகாப்பிற்கு சட்டப்படியான உள்ளாட்சி அமைப்பு தான் பொறுப்பேற்க முடியும். ஆபத்தான கழிவுகளை உள்ளாட்சி அமைப்பே முறையாக அகற்றியிருக்க வேண்டும்.

முறையாக கண்காணிப்பதும் அவர்களது பணியே. உள்ளாட்சி அமைப்பு மட்டுமின்றி, ஒவ்வொரு குடிமகனின் பொதுப் பாதுகாப்பையும் அரசு தான் உறுதி செய்ய வேண்டும். இந்த சிறுவர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். அவர்களது இயற்கையான உருவம் மாறியுள்ளது. படிப்பை இழந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவருக்கும் தலா ரூ.10 லட்சத்தை இழப்பீடாக விருதுநகர் கலெக்டர் வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி பெறும் வகையில், 5 ஆண்டுக்கு வைப்புத் தொகையாக 8 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.