சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு அபராதம்: சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் நடவடிக்கை

லண்டன்: சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அமல்படுத்தப்போகும் புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்தார்.

இதற்காக ரிஷி சுனக் அண்மையில், தனது காரில் பயணித்தபடி வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பேசினார். அப்போது அவர் காரின் சீட் பெல்ட்டை அணியாமல் பயணித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக பிரதமர் ரிஷி சுனக்குக்கு இங்கிலாந்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து போலீஸார் ட்விட்டரில் கூறும்போது, ‘‘ஓடும் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய தவறியதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை ரிஷி சுனக்கின் டவுனிங் ஸ்டிரீட் அலுவலக செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.