தமிழ்நாடு -ஒடிசா விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒடிசா விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
15-வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ளார். இந்த நிலையில் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தமானது, இளம் திறமையாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக்கொள்ள உதவும். இது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
image
இதனால் உலகத்தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமிகள், விளையாட்டு கல்விக்கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிடவும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும்.
இந்நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டர்கி பொருளாளர் சேகர் மனோகரன், ஒடிசா மாநில விளையாட்டுத்துறை செயலர் வினில் கிருஷ்ணன்,
ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் மதிவதனன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.