தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!

தை அமாவாசை 2023: ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் இந்த முறை சனிக்கிழமை வருவது கூடுதல் சிறப்பு. ஏனெனிலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனாதன தர்மத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில், மக்கள் முன்னோர்களின் ஆசி பெற தர்ப்பணம் கொடுத்து தானங்களை செய்யும் வழக்கம் உள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். தை அமாவாசை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் இப்பகுதியில் குவிந்தனர்.

இன்று தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் சுருளி அருவி ஆற்றங்கரை பகுதியில் பிண்டம் வைத்து எள்ளும் தண்ணீரும் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் பூதநாராயணன் கோயில், நவதாணியம் வைத்து வேலப்பர் கோயில், கைலாயநாதர் கோயில், சிவன் கோயில்களிலும் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டனர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தமபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஏ எஸ் பி மதுக்குமாரி கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

மேலும் பக்தர்கள் கூறும் பொழுது காசி, ராமேஸ்வர் போன்ற இடங்களுக்கு சென்று வருவதை விட எங்களுக்கு சுருளி சிறப்பான ஒன்றாக உள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது எங்களுக்கு மன திருப்தியை தருகிறது என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.