”பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இருக்காது” – அண்ணாமலை

கோயில்களை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத் துறை தேவை இல்லாத ஒன்று என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, போராட்டத்டதை முடித்து வைத்து மேடையில் பேசினார்.
அப்போது, “மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் மிக்சர், பட்டார் முறுக்கு சாப்பிட்டனர் அதுவும் உண்டியல் பணம் தான்.
image
வடபழனி முருகன் கோயில் அக்குவா வாட்டர் உள்ளிட்டவைகளுக்கு உண்டியல் பணத்தை செலவு செய்து இருக்கின்றனர். இவைகள் எல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகள்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காசை எடுத்து ரூ.30 லட்சத்தில் கார் வாங்கப்பட்டுள்ளது . 6 கால பூஜை நிறுத்தப்பட்டுள்ளது. பல கோவில் கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ரூ.21 கோடி கோயில் நிர்வாகத்தை தணிக்கை செய்ய ரூ.70 கோடி பணத்தை எடுத்துள்ளனர்.
image
திருச்செந்தூர் கோவிலில் 5,309 மாடுகள் மாயம் என தணிக்கைத் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயில்களை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத் துறை தேவை இல்லாத ஒன்று. சென்னையில் பிரதான இடத்தில் உள்ள கோவில் சொத்து சதுரடிக்கு 1 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கோவில் மூலமாக 16,00 கோடி ரூபாய் இந்துசமய அறநிலையத் துறைக்கு ஆண்டுதோறும் வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு சிலையை கூட மீட்டு கொண்டு வரவில்லை. அப்படி இருந்தால் ஒரு ஆவணத்தையாவது காட்ட வேண்டும். காசி தமிழ் சங்க நிகழ்ச்சியை வரவேற்காத தமிழக அரசு விமர்சனம் மட்டுமே செய்தது.
image
காசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டை புணரமைப்பு செய்ய ரூ.17 லட்சம் செலவு செய்து பெயருக்கு மட்டும் சும்மா செய்துள்ளனர். இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்துவர்களுக்கு விரோதமாக பாஜக செயல்படவில்லை. இந்து கோயில்களில் மட்டும் எண்ணெய் வாங்கக் கூட அதிகாரிகளிடம் அனுமதி கேட்க வேண்டியுள்ள கேவல நிலை உள்ளது.
இலங்கை யாழ்பாணத்தில் ஒரு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் தமிழகத்தில் அப்படி முடியாது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், இந்த துறையை எப்படி நடத்த வேண்டும் என்று யோசனை சொல்ல தயாராக உள்ளோம். விவாதம் நடத்த தயாராக உள்ளோம்
ராஜராஜ சோழன் சமாதியை ஏன் புணரமைப்பு செய்யவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை இருக்காது. அதற்காக முதல் கையெழுத்து பாஜக அமைச்சர் போடுவார்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.