விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட நுவரெலியா செல்லும் கல்வி அமைச்சர் (video)



நுவரெலியா, ரதல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 53 பேர் தொடர்ந்தும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​​ ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ளவர்கள் 5, 6, 7, 8 ஆகிய பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, தேஸ்டன் கல்லூரியில் இருந்து சுற்றுலா பயணமாக சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளனர். 4 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 வயது சிறுவனும், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர், விபத்துக்குள்ளான மாணவர்களுக்கு உடனடி சிசிக்கை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

மேலும் மாணவர்களின் உடல்நிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு உடனடி நடவடிக்கை வழங்குமாறும் ஜனாதிபதி விமானப்படைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விபத்துக்குள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர்களின் நலன் குறித்து விசாரிப்பதற்காக தானும் இன்று நுவரெலியா வைத்தியசாலைக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு பெற்றோர்கள் அடங்குவதாக கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் அதிபர் பிரமுதித விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என அதிபர் மேலும் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.